search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜராஜ சோழன் சிலை"

    ராஜராஜ சோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் கிரா சாராபாய் மனுவிற்கு பதிலளிக்க சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட் மேலும் 6 வார அவகாசம் அளித்துள்ளது. #IdolTheftCase #RajaRajaCholanIdol
    சென்னை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து சிலைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சாராபாய் அறக்கட்டளை நிர்வாகி கிரா சாராபாய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கிரா சாராபாய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    தங்களிடம் இருந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல்  தடுப்புபிரிவு எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவை 1960ஆம் ஆண்டு காணாமல்போன சிலைகள் தான் என்பதை நிரூபித்து விட்டால், அவற்றை வழங்கி விட தயாராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு 6 வாரத்திற்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க மேலும் 6 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolTheftCase #RajaRajaCholanIdol #GiraSarabhai #MadrasHC
    “30 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன ராஜராஜ சோழன் சிலை மீட்புக்கு ‘தினத்தந்தி’ செய்தியே காரணம்”, என்று முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் கூறினார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், வி.வி.சாமிநாதன். இவர் சென்னையில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் மிருளானி சாராபாய் மியூசியத்தில் இருக்கிறது, அச்சிலைகளை கைப்பற்ற வேண்டும்’, என்று ‘காஞ்சி பெரியவாள்’ என்று அழைக்கப்படுகிற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

    அரசியல் செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் உள்ள ஒரு குழு, இந்த களவுபோன சிலைக்கு பின்னால் இருக்கிறது. எனவே தான் அந்த சிலைகளை கைப்பற்ற முடியாமல் 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்த சம்பவம் தொடர்பாகவும், அதன் வழக்கு பின்னணி தொடர்பாகவும் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். ‘தினத்தந்தி’ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டு, சிலை களவு போனது குறித்து உலகம் அறிய செய்தது.

    இதுதொடர்பாக தமிழக அரசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். மாநில அரசின் சிலை மீட்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடமும் நேரில் வேண்டுகோள் விடுத்தேன். தொடர் நடவடிக்கைகளால் தான் சிலை மீட்பு தனிக்குழு உருவாக்கப்பட்டது.

    அந்த தனிக்குழுவினர் தான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகளை மீட்டு கொண்டு வந்தனர்.

    எனவே ‘தினத்தந்தி’ பத்திரிகை வெளியிட்ட செய்தியே ராஜராஜன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்க முக்கிய காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    சிதம்பரம்:

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர்.

    இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளுடன் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளை தஞ்சை பெரியகோவிலுக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    முன்னதாக சிலை தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலுக்கும், தில்லை நடராஜர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே மீட்கப்பட்ட சிலைகளை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கொண்டு வந்தோம். இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மீண்டும் அந்த சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.



    அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குஜராத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

    இந்த நிலையில் குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சிலைகளை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்ட போலீசார், உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். தற்போது ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த 2 சிலைகளும் நாளை மாலை தஞ்சையில் உள்ள பெரியகோவிலுக்கு எடுத்து வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×